தூத்துக்குடி தென்மாவட்டங்களில் போதுமான அளவிற்கு பருவமழை பெய்யாமல் கண்ணாமூச்சி காட்டி வருகிறது. மாவட்டத்திலுள்ள அணைகள், குளங்கள், குட்டைகள் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் போதிய தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் விவசாய சாகுபடி பணிகளை தொடங்கவும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் மட்டுமல்லாது தென்மாவட்டங்களிலும் பருவமழை சிறப்பாக பெய்திடவேண்டியும், அனைத்து நீர்நிலைகளிலும் நீர்மட்டம் போதுமான அளவு உயர்ந்து தண்ணீர் தட்டுப்பாடுகள் தீர்ந்திடவேண்டியும், விவசாய சாகுபடி பணிகளில் குறிப்பாக நெல் விளைச்சல் இந்தாண்டு அமோகமாக நடந்திடவும் வேண்டியும், பசுமை வளம் சிறக்கவேண்டியும் தூத்துக்குடி மஹா பிரத்தியங்கிராதேவி காலபைரவர் சித்தர் பீடத்தின் சுவாமிகள் ‘’சாக்தஸ்ரீ’’ சற்குரு சீனிவாச சித்தர் பொதிகை மலையான தாமிரபரணி நதிப்பகுதியில் சிறப்பு வருண ஜெபத்துடன் வழிபாடுகள் மேற்கொண்டார்.
இடைவிடாது பலமணி நேரங்கள் வேதமந்திரங்களை ஒலித்தும், வற்றாத ஜீவ நதியான அன்னை தாமிரபரணி நதிக்கு சிறப்பு வழிபாடுகள் செய்தும், தமது ஆன்மிக குருவான அகத்தியரை வணங்கியும் பருவமழைக்கான சிறப்பு வருண ஜெப வழிபாடுகளை நிறைவு செய்தார்.
கடந்த காலங்களில் இதுபோன்று பருவமழை பொய்த்த போது முறப்பநாடு தாமிரபரணி ஆற்றுப்படுகை மற்றும் பொதிகை மலையில் சிறப்பு வருண ஜெப வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். அவரது வருண ஜெப வழிபாடுகளை தொடர்ந்து பருவமழை சிறப்பாக பெய்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பொதிகை மலையின் வருண ஜெப வழிபாடுகளை தொடர்ந்து, தூத்துக்குடி சித்தர் பீடத்தில் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் மஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், வராஹி அம்மனுக்கு 16வகையான அபிஷேகத்துடன் யாகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் வழிபாட்டுக் குழுவினர், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.