தூத்துக்குடி மத்திய அரசின் ஓடிஓபி திட்டத்தின் கீழ் தமிழகத்தின் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தூத்துக்குடி ஆகிய 9 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழகத்தின் தொழில் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு புதிய திருப்புமுனையாக அமையும் என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் அன்னபூர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
ஓடிஓபி திட்டத்தின் முக்கிய நோக்கம், ஒவ்வொரு மாவட்டத்தின் பாரம்பரிய மற்றும் தனித்துவமான தயாரிப்புகளை உலக சந்தைக்கு கொண்டு செல்வதும், அந்த தயாரிப்புகளுக்கு பிராண்டிங், தரச்சான்றிதழ், நவீன தொழில்நுட்பம், சந்தைப்படுத்தல், ஏற்றுமதி வசதிகள் மற்றும் நிதி ஆதரவை வழங்குவதுமாகும். இந்த திட்டத்தின் மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வலுப்பெறுவதுடன், கைவினைஞர்கள், விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் இளைஞர்களுக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். மாவட்டத்தின் அடையாளமாக இருக்கும் பொருட்கள் உலக சந்தையில் அறிமுகமாகி, ஏற்றுமதி கணிசமாக உயரும். உத்தரப் பிரதேசத்தில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதன் மூலம், பல மாவட்டங்களின் பாரம்பரிய பொருட்கள் சர்வதேச சந்தையை அடைந்து, ஏற்றுமதி மதிப்பு உயர்ந்ததுடன், ஆயிரக்கணக்கான சிறு தொழில்கள் புத்துயிர் பெற்று, லட்சக்கணக்கான மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. இதன் வெற்றியே தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படுவதற்கான காரணமாக உள்ளது. தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 மாவட்டங்களும் ஏற்கனவே தொழில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளன. இந்த மாவட்டங்களுக்கு இத்திட்டத்தின் முழுமையான ஆதரவு கிடைப்பதன் மூலம், உலகளாவிய முதலீடுகள் அதிகரிக்கவும், ஏற்றுமதி மேலும் உயரவும், புதிய தொழிற்சாலைகள் மற்றும் துணைத் தொழில்கள் உருவாகவும் வாய்ப்புள்ளது. இதன் மூலம் வருங்காலங்களில் பல்லாயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியையும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தையும் முன்னிலைப்படுத்தி செயல்படும் மத்திய அரசின் இந்த முயற்சி, மாநிலத்தின் தொழில் துறைக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும் என்றும், வருங்காலத்தில் தமிழகம் உலகளாவிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக உயர்வதற்கு இந்த திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று வௌியிட்டுள்ளஅறிக்கையில் அன்னபூர்ணா தெரிவித்துள்ளா்