தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முள்ளாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் போட்ட முதல் கையெழுத்து மகளிர் விடியல் பயணத் திட்டம். பல லட்சக்கணக்கான மகளிரின் வாழ்வாதாரத்திற்கும் பொருளாதார சுதந்திரத்திற்கும் வழிவகுத்த இந்தத் திட்டத்தின் பெயரில் இருந்த விடியல் என்ற வார்த்தையை இந்த தவெக அரசு நீக்கியிருக்கிறது.
ஏற்கனவே நான் முதல்வன் முதல்வர் படைப்பகம் போன்ற திட்டங்களில் இருந்து முதல்வர் என்ற வார்த்தையை நீக்கியிருந்த நிலையில், தற்போது விடியல் என்ற வார்த்தையையும் நீக்கியிருக்கிறார்கள். ஆட்சிப் பொறுப்பேற்று 60 நாட்களாகியும் ஆக்கப்பூர்வமான ஒரு திட்டத்தைக் கூட தொடங்க முடியாத இந்த தவெக அரசு, தனது இயலாமையை மறைக்க இத்தகைய கீழ்த்தரமான இருட்டடிப்பு அரசியலைச் செய்து வருகிறது. திராவிடமாடல் அரசு தொடங்கிய திட்டங்களில் உள்ள பெயர்களை மாற்றுவதில் காட்டும் அக்கறையை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் புதிய திட்டங்களைக் கொண்டு வருவதிலும் காட்டுங்கள். இந்தப் பெயர் மாற்றங்களால், திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் மக்கள் மனதில் இருந்து திமுக தலைவா் ஸ்டாலினையும் அழித்துவிட முடியாது என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.