தூத்துக்குடி செர்வைட் சிபிஎஸ்இ பள்ளியில் என் அப்பா, என் ஹீரோ –வாழ்க்கை என்ற போட்டியில் இணைந்து விளையாடுவோம் என்ற கருப்பொருளில் தந்தையர் தினத்தை முன்னிட்டு உற்சாகமான கிரிக்கெட் போட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. தந்தையரின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சியை பள்ளி முதல்வர் மெர்சி இம்மாகுலேட் தொடங்கி வைத்தார்.
50-க்கும் மேற்பட்ட தந்தையர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நான்கு நட்புறவுப் போட்டிகளில் விளையாடினர். அவர்களின் குழந்தைகள் உற்சாகக் குரல்களுடன் போட்டியை ரசித்து தங்கள் தந்தையரை ஊக்கப்படுத்தினர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளர் கிரிஸ்பின், பெற்றோர்களும் மாணவர்களும் விளையாட்டுகளில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார். உடல் ஆரோக்கியம், ஒழுக்கம் மற்றும் வாழ்க்கைத் திறன்களை வளர்ப்பதில் விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து அனைவரையும் ஊக்குவித்தார். ஒவ்வொரு வருடமும் தந்தையர் தினத்தை முன்னிட்டு செர்வைட் பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டு நடத்தப்படுகிறது. தந்தையர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தவும், அவர்களை ஊக்குவிக்கவும் மகிழ்ச்சிப் படுத்தவும் இந்த விளையாட்டு நடத்தப்படுகிறது.