தூத்துக்குடி மாநகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் தீவிரமடைந்து, பொதுமக்கள் குடிநீருக்காக திண்டாடி வரும் நிலையில், தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மீன்வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் எங்கே இருக்கிறார்? மக்களின் அடிப்படை பிரச்னையை தீர்க்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜேஷ் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வழங்கும் பகுதியில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக குடிநீர் வரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிக்கும் நேரத்தில், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் பிரச்னையை சமாளிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், தொகுதி மக்களின் பிரதிநிதியாகவும் அமைச்சராகவும் இருக்கும் ஸ்ரீநாத் இதுவரை என்ன செய்தார் குடிநீர் தட்டுப்பாடு குறித்து மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து அமைச்சர் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினாரா? குடிநீர் வரத்து பாதிப்புக்கான காரணத்தை நேரில் ஆய்வு செய்தாரா? மாற்று குடிநீர் ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டாரா? பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து செயல்திட்டம் வகுத்தாரா? என்பதற்கு அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். தூத்துக்குடி மாநகரம் மட்டுமல்லாமல் புறநகர் பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரிகளை ஒருங்கிணைத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய அமைச்சர் மவுனமாக இருப்பது ஏன்?. ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்கு மேலாகியும் தூத்துக்குடி மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து அமைச்சர் உரிய கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் மத்தியில் ஏற்கனவே எழுந்துள்ளது. மேலும், தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்னையை அரசியல் அறிக்கைகளுக்குள் முடித்துவிடாமல், அமைச்சர் உடனடியாக களத்தில் இறங்க வேண்டும். மாநகராட்சி ஆணையர், குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து துறை அதிகாரிகளையும் அழைத்து அவசர கூட்டம் நடத்தி, குடிநீர் விநியோகத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும். “மக்கள் தண்ணீருக்காக தவிக்கும் போது அமைச்சர் மவுனமாக இருக்க முடியாது. பதவி என்பது அதிகாரத்தை அனுபவிப்பதற்காக அல்ல; மக்களின் பிரச்னையை தீர்ப்பதற்காக. தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என ராஜேஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்