தூத்துக்குடி ஒய்எம்சிஏ நிர்வாகக் குழு உறுப்பினர் பேராசிரியர் ஜான்பிரின்ஸ் தலைமையில் பிரபாகர், ஏஞ்சல் பாண்டியன் ஆகியோர் கன்னியாகுமாரி முதல் ஜம்மு காஷ்மீர் வரை, காரில் 40 நாள்கள் பயணித்து, பாரத் தர்ஷன் 2026 என்ற தலைப்பில் பல்வேறு பகுதிகளில் சுற்றுச்சூழல் மற்றும் கலாசாரத்தை பாதுகாக்க வலியுறுத்தினர். இவர்களின் 40 நாள் பயணம் நிறைவு செய்து, தூத்துக்குடிக்கு வருகை தந்தவர்களுக்கு, ஒய்எம்சிஏ சார்பில் வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு ஒய்எம்சிஏ தலைவர் ஸ்டேன்லி வேதமாணிக்கம் தலைமை வகித்தார். பேராசிரியர் ஜான் பிரின்ஸ், பிரபாகர், ஏஞ்சல் பாண்டியன் ஆகியோர் தங்கள் 40 நாள் பயண அனுபவங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். இதில், ஓய்வுபெற்ற பேராசிரியர் மணிவண்ணன், பேராசிரியர் ஜாக்சன், துரை கந்தசாமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். பயணத்தை நிறைவு செய்தவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, துணைத்தலைவர் விஜயகுமார் முத்துமணி, பொருளாளர் சார்லஸ் சுந்தர் சிங், செயலாளர் ராபர்ட், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஜாய்பெல், தனேஷ், ஜோஷ் தங்ககுமார், ஜேக்கப் மனோகர், சந்திரசேகர், சீனிவாசகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பின்னர் பேராசிரியர் ஜான் பிரின்ஸ் செய்தியாளரிடம் கூறுகையில் இந்தியாவின் வளர்ச்சி இலக்கு 2047ஐ முன்னிட்டு, இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கிலும், இந்தியாவின் சுற்றுச்சூழல், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தூத்துக்குடியிலிருந்து இந்த பயணத்தை தொடங்கினோம். Learn, Inspire, Motivate என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு, ஜென்இசட் இளைஞர்களை வளர்ச்சிப் பாதையில் நடத்தும் முயற்சியாக இது அமைந்தது. 18 மாநிலங்களில் சுமார் 100 இடங்களை பார்வையிட்டு, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து உரையாடினோம். மொத்தம் 15,000 கி.மீ. பயணம் செய்து தூத்துக்குடி ஒய்எம்சிஏ வளாகத்தில் பயணம் நிறைவு செய்தோம் என்று கூறினாா்.