ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி தாளமுத்துநகரில் இருதரப்பு தவெகவினருக்கு இடையே ஏற்பட்ட கோஷ்டி பூசல் தொடர்பாக அடிதடி அரிவாள்வெட்டு என நடைபெற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினை காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றவர் மதன்ராஜா. தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளராகவும், தற்போதைய தவெக அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழிலக அமைச்சராகவும் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருந்து வரும் சூழலில் அமைச்சரின் பல்வேறு கட்சி விரோத நடவடிக்கைகள் மற்றும் மாற்றுக் கட்சியினருக்கான முக்கியத்துவம், உறவினர்களுடனான ஆதிக்கம் என பலதரப்பட்ட அரசியல்ரீதியான போக்குகாரணமாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்குளம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளிலுள்ள நிர்வாகிகள் தொடர்ந்து எதிர்ப்புகளையும், பனையூர் தலைமை அலுவலகத்திற்கு அமைச்சர் மதன்ராஜாவிற்கு எதிராக புகார்களையும் அனுப்பிய வண்ணம் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்றைய தினம் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளான விஜி மற்றும் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோரிடையே ஏற்பட்ட இருதரப்பு கோஷ்டி மோதலில் தாளமுத்துநகரை சேர்ந்த கண்ணன் மகன் சுயம்புலிங்கத்திற்கு அரிவாள் வெட்டு மற்றும் இந்திரா நகரை சேர்ந்த மாரிச் செல்வம் உள்ளிட்டோர் படுகாயமடைந்த நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட வழக்குப் பதிவு செய்ததாக கூறப்படுகின்றன. தவெகவினரிடையே ஏற்பட்ட இத்தகைய கோஷ்டி மோதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியினரிடையே ஏற்பட்ட இச்சம்பவம் தொடர்பாக தவெக நிர்வாகி ஜெகதீஸ் கூறியதாகவது
நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட மதன்ராஜா வெற்றி பெற கருங்குளம், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் என கடுமையாக வேலை செய்து தளபதி விஜய் அவர்கள் தலைமையிலான தவெக ஆட்சிக்கும், தொகுதி மக்களிடையேயும் பெரிய அளவில் வேலை செய்து வெற்றி பெற பாடுபட்டோம். தேர்தலுக்கு பின் வெற்றி பெற்ற ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் மதன்ராஜா அதன் பின் அமைச்சரவையில் பங்கு வகித்த பிறகு கட்சிகளுக்குள் பல்வேறு கட்சி நீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளராக மதன்ராஜா இருந்து வரும் சூழலில் மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர்களையும், உறவினர்களையும், சமூக ரீதியாக தவெகவில் முன்னிலைப்படுத்தி வருவதால் இருபது ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக இருந்து கட்சியாக மாற்றப்பட்டது வரை உழைத்த எங்களை திட்டமிட்டு புறக்கணித்து வருவதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
மேலும் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள கருங்குளம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய நிர்வாகிகள் மத்தியிலும் இத்தகைய அமைச்சா் மதன் ராஜாவிற்கு எதிரான கோஷ்டி மோதல்கள் எழுந்த வண்ணமாகவே உள்ளதாக கூறப்படுகின்றன. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்டியடிப்பின் காரணமாக தவெகவினிடையே இத்தகைய கோஷ்டி பூசல் எழுந்துள்ளதால் தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் அமைச்சர் மதன்ராஜாவை நீக்கிவிட்டு தகுதியான கட்சியினரை அரவனைத்து செல்லக்கூடியவரை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என பனையூர் அலுவலகத்திற்கு கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் இருதரப்பு தவெக கட்சியினருடனான மோதல் போக்கை காவல்துறையினர் தீவிரமாக கண்காணிப்பதோடு மக்களுக்கு இடையூறு இல்லாத அமைதியான நிலையை உருவாக்க முன் வர வேண்டும்.