வியாபாரச் சங்க உறுப்பினரான ஹரி பாலகிருஷ்ணன், தனது மாட்டு இறைச்சி கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இல்லம் அருகே மூன்று மர்ம நபர்களால் வழிமறித்து தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் ஹரி பாலகிருஷ்ணனின் தலையின் பின்பகுதி மற்றும் கை பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டதில் ஆழமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், அவரது கையில் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதலின் போது அவரது கையில் அணிந்திருந்த மோதிரத்தையும் மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.தாக்குதலை மேற்கொண்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற நிலையில், படுகாயமடைந்த ஹரி பாலகிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
நேற்று இரவு நடைபெற்ற இந்த கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். அவர்கள் மீது வழிப்பறி வழக்கு மட்டுமின்றி, கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தலைவர் மக்கள்நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.மேலும், இதுகுறித்து தென்பாகம் காவல் ஆய்வாளரை சந்தித்து உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என்றும், உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால் பெருந்தலைவர் மக்கள்நலச் சங்க நிறுவனத் தலைவர் எஸ்.பி மாரியப்பன் தலைமையில் தூத்துக்குடி வ உ சி மார்க்கெட் பகுதியில் மிகப்பெரிய கண்டனப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தலைவர் மக்கள்நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது