தூத்துக்குடி புவனேஸ்வரி டிரேடர்ஸ் நிறுவனத்தில் சூப்பர்வைசராகப் பணிபுரிந்து வந்த செந்தில் வயது 43 கடந்த நவம்பர் 5ம் தேதி சிப்காட் பைபாஸ் சாலையில் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்துச் சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்ேடாபா் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது
பாதிக்கப்பட்ட செந்தில் உயிருக்கு ஆபத்தான, தீவிரமான அறுவை சிகிச்சையை மூத்த மருத்துவர்கள் முன்னின்று நடத்தாமல், வெறும் 3 ஆண்டுகள் மட்டுமே அனுபவமுள்ள ஒரு உதவி மருத்துவரைக் கொண்டு அவசரகதியாக நடத்தியதே இந்த மரணத்திற்கு முக்கியக் காரணம் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோது பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், விபத்தை ஏற்படுத்திய அடையாளம் தெரியாத வாகனத்தைக் கண்டறிந்து, உண்மைத் தன்மையை முழுமையாக வெளிக்கொண்டு வர சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். உண்மையான காரணங்கள் கண்டறியப்படும் வரையிலும், இந்த மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரையிலும் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்யவோ, வாங்கவோ போவதில்லை எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் எடுத்துள்ள முடிவிற்குச் சட்ட உரிமைகள் கழகம் முழு ஆதரவை வழங்குகிறது. செந்திலின் மரணம் குறித்து கலெக்டா் மற்றும் மருத்துவத் துறை உயர்மட்ட அதிகாரிகள் முன்னிலையில் ஒரு சிறப்புக் குழு அமைத்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். விபத்து ஏற்படுத்திய வாகனத்தை விரைந்து கண்டறியவும், விபத்தின் பின்னணியில் உள்ள அனைத்து விபரங்களையும் வெளிப்படையாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சந்தேகங்களைப் போக்க வேண்டும் உயிரிழந்த செந்திலின் குடும்பத்திற்குப் புவனேஸ்வரி டிரேடர்ஸ் நிறுவனம் மற்றும் தமிழக அரசு உடனடியாக உரிய நிதியுதவி மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கும் வரை சட்ட உரிமைகள் கழகம் தார்மீக ரீதியாகவும் சட்டப்பூர்வமாகவும் என்றும் துணையாக இருக்கும் என்று வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் கூறியுள்ளாா்.