தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு சவேரியார்புரம் பகுதியில் உள்ள மெயின் ரோட்டில் மாடுகள் நடுரோட்டில் படுத்துக்கிடப்பதாலும், சுற்றித்திரிவதாலும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், சாலையின் நடுவே மாடுகள் படுத்துக்கிடப்பது வாகன ஓட்டிகளுக்குப் பெரும் இடையூறாக உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் சிரமப்படுவதுடன், விபத்துகள் ஏற்படும் அபாயமும் நிலவுகிறது.
குறிப்பாக, மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே செல்வதாலும், நடுரோட்டில் படுத்துக்கிடப்பதாலும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, சாலையில் சுற்றித்திரியும் மாடுகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கா. செல்வராஜ் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.