தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்” எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அறிவித்திருப்பதை பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் மனமார வரவேற்கிறது.இதுகுறித்து பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”கல்விக்கண் திறந்த கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜர், தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும், ஏழை எளிய பள்ளி மாணவர்களின் நலனுக்கும் ஆற்றிய மகத்தான சேவையைப் போற்றும் வகையில், பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.இந்த சிறப்பான முடிவை எடுத்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. விஜய் அவர்களுக்கு பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவருடைய புகழ் மேலும் மேலும் உயர்ந்து, தமிழக மக்களுக்கு பல நலத்திட்டங்களை வழங்கி சிறப்புடன் பணியாற்ற இறைவனை வேண்டிக் கொள்கிறோம்.பெருந்தலைவர் காமராஜரின் உயரிய கல்விச் சிந்தனையும், மாணவர் நலப் பணிகளும் என்றும் நிலைத்திருக்க இந்தப் பெயரிடல் பெரும் மரியாதையாக அமையும். இதனை பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கம் முழு மனதுடன் வரவேற்கிறது.”
இவ்வாறு பெருந்தலைவர் மக்கள் நலச் சங்கத்தின் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தெரிவித்துள்ளார்