தூத்துக்குடி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக குரு பங்காரு அம்மா அருளியபடி 3ம் மைல் அருகே உள்ள திருவிக நகரில் உள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் இயற்கை வழிபாடு மூலம் அகண்டதீபம் ஏற்றும் விழா நடைபெற்றது.
இயற்கை சீற்றம் தனியவேண்டியும், அளவான மழை பொழிவு வேண்டியும், விவசாயம் வளம் பெற வேண்டியும் சங்கல்பம் செய்து குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜையுடன் கருவறையில் உள்ளே ஆன்மிக இயக்க தூத்துக்குடி மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சக்தி முருகன் அகண்ட தீபம் ஏற்றினார்.
தொடர்ந்து திருஷ்டிகள் கழிக்கப்பட்டது. தொடர்ந்து தாமரை சக்கரத்தில் 3 கன்னிப்பெண்கள் கையில் காமாட்சி விளக்கு ஏந்தி நின்றனர். முக்கோண சக்கரத்தில் சிறுவர்கள் 5 பேர் அகல்விளக்கு ஏந்தி நின்றனர். அறுங்கோண சக்கரத்தில் 5 சிறுமியர் மாவிளக்கு ஏந்தி நின்றனர். செவ்வக சக்கரத்தில் நடுத்தர வயது சுமங்கலிகள் 5 பேர் சாத்துக்குடி விளக்கு ஏந்தி நின்றனர். எண் கோன சக்கரத்தில் இளவயது சுமங்கலிகள் 5 பேர் ஓம் சக்தி விளக்கு ஏந்தி நின்றனர். வட்ட சக்கரத்தில் மூத்த சுமங்கலி பெண்கள் 5 பேர் ஆப்பிள் விளக்கு ஏந்தி நின்றனர்.
கருவறையில் இருந்து புறப்பட்ட அகண்டம் 1 கன்னிப்பெண், 1 நடுத்தர வயது சுமங்கலி, 1 மூத்த சுமங்கலி ஆகிய 3 பெண்கள் எடுத்து வந்தனர். சீர்வரிசை பொருட்களான நவதானியம், பழங்கள், வெற்றிலை பழம் மற்றும் கருவறை அம்மன் சிலை, குரு சிலை ஆகியவை முன் செல்ல அனைத்து சக்கரங்களையும் சுற்றி வந்து மீண்டும் கருவறையில் தென்கிழக்கு மூலையில் நிறுவப்பட்டது. பொதுமக்கள், பக்தர்கள் 24 மணிநேரமும் அகண்ட தீபத்திற்கு முக்கூட்டு எண்ணெய் ஊற்றி தரிசனம் செய்யலாம்.
நிகழ்ச்சியில், திருவிக நகர் சக்தி பீட செயலாளர் கந்தசாமி, துணைத் தலைவர் திருஞானம், பொருளாளர் அனிதா, இளைஞர் அணி பாலசுப்ரமணி, புதிய துறைமுகம் கண்ணகி, புதுக்கோட்டை பரமேஸ்வரி, மகளிர் அணி பொறுப்பாளர்கள் முத்துலெட்சுமி, செல்வி, அகிலா, உட்பட பலர் கலந்து கொண்டனர்.