தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் நிறுவனத்தலைவர் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது மடத்தூர் ஆர்ச் எதிரே பைபாஸ் சாலையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளில் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. சாலைப் பணிக்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் எந்த நீர் ஆதாரத்திலிருந்து பெறப்படுகிறது? அதற்கு சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? பயன்படுத்தப்படும் தண்ணீர் குடிநீர் விநியோக அமைப்பிலிருந்து எடுக்கப்படுகிறதா அல்லது மாற்று நீர் ஆதாரத்திலிருந்து பெறப்படுகிறதா? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியிடப்படவில்லை.
சட்ட உரிமைகள் கழகம் சார்பில், அரசு மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தை ஆய்வு செய்து உண்மை நிலையை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். மேலும், சாலைப் பணிக்காக தண்ணீர் பயன்படுத்த தேவையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா? அனுமதி வழங்கப்பட்டிருந்தால் அதன் விவரங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும். பயன்படுத்தப்படும் நீரின் ஆதாரம் என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது யார் மீதும் முன்கூட்டியே குற்றச்சாட்டு முன்வைப்பதற்கான அறிக்கை அல்ல. பொதுச் சொத்துகள், குடிநீர் வளங்கள் மற்றும் அரசின் வளங்கள் சட்டப்படி பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொது நலக் கோரிக்கையாகும். இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமும் தேவையான தகவல்கள் கோரப்படவுள்ளன. விசாரணை முடிவுகள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கப்பட வேண்டும் என்பதே சட்ட உரிமைகள் கழகத்தின் நிலைப்பாடாகும் என்று வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனா்.