தூத்துக்குடி மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் திமுக– பாஜக குறித்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பேசிய நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு நியமனத்தை சுட்டிக்காட்டி, “திமுகவுடன் ரகசிய கூட்டணி வைத்திருப்பது யார்?” என தமிழக அரசுக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் கேள்வி எழுப்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த காலங்களில் கடுமையான கூட்ட நெரிசல், அடிப்படை வசதிகள் பற்றாக்குறை, பக்தர்களின் பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் இருந்து வந்தன. இந்த நிலையில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, தூத்துக்குடி எம்.பி., கனிமொழி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு நெருக்கமானவர்கள் என திமுக வட்டாரங்களில் கருதப்பட்டவர்களுக்கு கோவில் அறங்காவலர் குழுவில் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. திமுகவை சேர்ந்த ஆ.ராசாவுக்கு நெருக்கமானவர் என கூறப்படும் ஒருவருக்கும் அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும், திமுக ஆட்சிக்காலத்தில் அறங்காவலர் பொறுப்புகளில் இருந்ததாக கூறப்படும் அதே நபர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மாற்று அரசியல், புதிய நிர்வாகம் என்று கூறிவிட்டு, முந்தைய ஆட்சியில் பொறுப்பில் இருந்தவர்களையே மீண்டும் அதே கோவில் நிர்வாகத்தில் அமர்த்துவது ஏன்? கோவில் இணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் அறநிலையத்துறை அதிகாரிகள் என்பதை உணர்ந்து, அரசியல் சார்பற்ற முறையில் செயல்பட வேண்டும். கோவில் நிர்வாகம் பக்தர்களின் நலனை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் எந்த அரசியல் கட்சியின் நலனையும் மையமாகக் கொண்டதாக இருக்கக் கூடாது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு நியமனங்களை தமிழக அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தகுதி மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு உட்படாத நியமனங்கள் இருந்தால் அவற்றை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சார்பில் அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று சித்ராங்கதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.