தூத்துக்குடி சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருப்பது பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ஊழல், சட்டவிரோத பண வசூல், அதிகார துஷ்பிரயோகம் அல்லது அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருந்தால், அதில் சம்பந்தப்பட்டவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சட்ட உரிமைகள் கழகத்தின் உறுதியான நிலைப்பாடாகும்.
சோதனை நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவோ, குறிப்பிட்ட நபர்களை மட்டும் குறிவைக்கும் நடவடிக்கையாகவோ அமைந்துவிடக்கூடாது. கிடைக்கப்பெறும் ஆவணங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் வெளிப்படையான, நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். சோதனை மேற்கொள்வது மட்டுமே ஒருவரின் குற்றத்தை நிரூபிப்பதாகாது. விசாரணை முடிவடைவதற்கு முன்பே சம்பந்தப்பட்டவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரிப்பதும் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானதாகும். குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால் வழக்குப் பதிவு செய்து, விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, நீதிமன்றத்தின் மூலம் உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும். மேலும், டாஸ்மாக் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வமற்ற பண வசூல் முறை செயல்பட்டதா, வசூலிக்கப்பட்ட பணம் யாருக்குச் சென்றது, எந்தெந்த அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள் இதில் தொடர்புடையவர்கள், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்பதையும் முழுமையாக விசாரிக்க வேண்டும். சோதனையில் கைப்பற்றப்பட்ட பணம், ஆவணங்கள் மற்றும் சொத்துகள் குறித்த விவரங்களையும், விசாரணையின் முன்னேற்றத்தையும் லஞ்ச ஒழிப்புத்துறை உரிய காலத்தில் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஊழல் புகார்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இல்லாமல் ஒரே சட்ட நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் அரசியல் பரபரப்பை உருவாக்குவதற்காக இல்லாமல், பொதுமக்களின் வரிப்பணத்தையும் அரசின் வருவாயையும் பாதுகாப்பதற்கான உண்மையான சட்ட நடவடிக்கையாக அமைய வேண்டும். எனவே, டாஸ்மாக் முறைகேடு தொடர்பான அனைத்து புகார்களையும் விரிவாக விசாரித்து, தவறு செய்தவர்கள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என சட்ட உரிமைகள் கழக நிறுவனத்தலைவா் வக்கீல் செல்வம் கிறிஸ்டோபா் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளாா்.