தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தக்காரர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் தனியாா் ஹோட்டல் கருத்தரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் அன்புராஜ் ஜெபசிங் தலைமை வகித்தார். சங்கத்தின் மூத்த உறுப்பினர் குணசீலன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் செயலாளர் ஹீராஜான் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் பொருளாளர் பாக்கியம் 30.06.2026 வரையான சங்கத்தின் வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தார். அதற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. சங்கத்தின் திருத்தப்பட்ட சட்ட விதிகளை சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் ராஜா வெளியிட சங்கத்தின் தலைவர் அன்புராஜ் ஜெபசிங் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் மறைந்த சங்க உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் நேர்மையான நிர்வாகத்தை வழங்கி வரும் தமிழக அரசுக்கும் முதல்வர்க்கும் சட்டம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கும் நன்றி தெரிவித்தும், உடன்குடி அனல்மின் நிலைய திட்டப்பணிகள் முடிந்து பராமரிப்பு பணிகளுக்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ள நிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தைப் போன்று உடன்குடி அனல்மின் நிலையத்தையும் உற்பத்தியில் முன்னோடி நிலையமாக மாற்றும் வகையில் ஒப்பந்தப் பணிகளை நமது சங்க உறுப்பினர்கள் எடுத்து சிறப்பாக செயல்படுத்த வேண்டும் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கிளவுட் ஆடிட் முறையை அகற்றி தந்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமாருக்கும், உறுதுணையாக இருந்த தமிழக மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணனுக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் கோவிந்தராவ்க்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தும், இபிஎப் மற்றும் இஎஸ்ஐ உள்ளிட்ட தொழிலாளர் நல கட்டணங்களை வாரியம் திரும்ப வழங்க வலியுறுத்தியும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் சட்ட ஆலோசகர் ராஜா நன்றி கூறினாா்.