தமிழர்களின் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தை போற்றும் வகையில், தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலைத் திருவிழா 2025 நேற்று (ஜூன் 13) கோலாகலமாகத் தொடங்கியது. ஜூன் 15 வரை நடைபெறவுள்ள இந்தத் திருவிழாவை, தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்துச் உரையாற்றினார்.
இரண்டாம் நாளான இன்று ஜூன் 14ம் தேதி தூத்துக்குடி தமிழன்டா கலைக்குழு, வள்ளியூர் அபிநயகீதம் பல்சுவை கலை நிகழ்ச்சி, குமார ராமன் தேவராட்டம் கலைக்குழு, ஜமீன் கோடாங்கிப்பட்டி, கொங்கு பண்பாட்டு மையம் – பெருஞ்சலங்கையாட்டம், விழுப்புரம் மாலன் மாற்றுத்திறனாளிகள் மலர் கம்பம் குழு, காஞ்சிபுரம் விவேகானந்தா கிராமிய கலைக்குழு, சூப்பர் சிங்கர் ஷாம் விஷாலுடன் இணைந்து மெட்ராஸ் சந்திப்பு (ஜங்ஷன்) இசைக்குழு – ஒளி இசை இசைக்குழு ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.
தூத்துக்குடியில் நான்காவது நெய்தல் கலை விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.
இந்த விழாவில் கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், பறையாட்டம், குச்சியாட்டம், துடும்பாட்டம், ஜிம்பலா மேளம், பொய்க்கால் குதிரை போன்ற 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. ஒவ்வொரு நாளும் மாலை 5:30 மணி முதல் இரவு 10 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
உணவு கண்காட்சி.
தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளை காட்சிப்படுத்தும் விதமாக உணவு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட அரங்குகள் மற்றும் நபார்டு சார்பில் 30-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளது.