தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள எஸ்ஏவி பள்ளியின் சார்பில் என்எஸ்எஸ் முகாம் கடந்த 26ந் தேதி தொடங்கி 7 நாட்கள் நடைபெற்றது. மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தூய்மைப் பணிகள், கல்விச் சுற்றுலா மற்றும் சமூகநலப் பணிகள் நடைபெற்றன.
முகாமில் மாணவர்களுக்கு அலைபேசி பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து டாக்டர் விக்னேஷ் விழிப்புணர்வு உரையில் மாணவர்கள் அலைபேசியை அளவோடு பயன்படுத்த வேண்டும், சமூக வலைதளங்களைத் தவறான முறையில் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விலகி ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
பிரேமா இருமதி தொழுநோய் மருத்துவமனையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை மாணவர்கள் நேரில் சந்தித்து, அவர்களின் உடல்நிலை மற்றும் தேவைகள் குறித்து அன்புடன் நலம் விசாரித்தனர். நோயாளிகளுடன் உரையாடி அவர்களின் நிலைமைகளை கேட்டறிந்து, அவர்களுக்கு ஆதரவும் ஆறுதலும் வழங்கினர்.
மாணவர்கள் சிபில் ஐஸ் புரடக்ஷன் பேக்டாிக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஐஸ்பாா் தயாரிக்கும் முறைகள், பயன்படுத்தப்படும் இயந்திரங்களின் செயல்பாடுகள் மற்றும் உற்பத்தி செயல்முறைகள் குறித்து மாணவர்கள் நேரடியாகப் பார்வையிட்டு அறிந்து கொண்டனர். தொடர்ந்து, கீழ அழகாபுரி முத்தாரம்மன் திருக்கோவில் வளாகத்தில் மாணவர்களால் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
மாப்பிள்ளையூரணி ஊராட்சி துணைவட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுசாமி, ஊராட்சி செயலாளர் ஜெயரத்தினம் மற்றும் சுகாதார ஊக்குனர் ஆரோக்கியமேரி ஆகியோர் தலைமையில் பல்வேறு சமூகநலப் பணிகள் நடைபெற்றன. முதற்கட்டமாக மரக்கன்றுகள் நட்டி கோவில் தூய்மைப் பணி நடைபெற்றது. மேலும், குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனத் தனித்தனியாகப் பிரித்து சேகரிப்பது மற்றும் அவற்றை உரிய முறையில் அகற்றுவது குறித்து சுகாதார ஊக்குனர் ஆரோக்கியமேரி மாணவர்களுக்கு விளக்கமளித்தார். குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைத்து தூய்மையான சுற்றுப்புறத்தை உருவாக்க முடியும் என்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்கள் நிலா சீ ஃபுட்ஸ் மற்றும் மாப்பிள்ளையூரணி உரம் தயாரிக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பணிபுரியும் தொழிலாளர்களிடையே காசநோய் தடுப்பு மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தமிழன்டா கலைக்குழுவின் தலைவர் ஜெகஜீவன் மாணவர்களிடையே ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் சிறந்த வாழ்க்கை முறைகள் குறித்து பயனுள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கீழ அழகாபுரி பகுதியில் பொதுமக்களுக்கு போதை ஒழிப்பு மற்றும் காசநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன. மாணவர்கள் பொதுமக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து, திருக்குறிப்பு தொண்டர் பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணியில் மாணவர்கள் பங்கேற்றனர்.
சமூகப் பொறுப்பை வளர்க்கும் என்எஸ்எஸ் முகாமில் மாணவர்களிடையே சமூகப் பொறுப்பு, மனிதநேயம், தூய்மை உணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, போதை ஒழிப்பு மற்றும் சேவை மனப்பான்மை ஆகியவை மேம்படும் வகையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பங்கேற்புடன் தூய்மைப் பணியும் நடைபெற்றது. மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை உணர்ந்து செயல்பட்டனர்.