டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் அய்யா வைகுண்டரை அவமதிக்கும் வகையில் கேள்வி கேட்கப்பட்டதாக பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் தலையிட்டு தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்ததாவது : தமிழ்நாடு பப்ளீக் சர்வீஸ் கமிஷன் நேற்று முன்தினம் ஒரு தேர்வை நடத்தியிருக்கு. இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான தேர்வு அது. இந்தத் தேர்வுலதான் பொது அறிவு வினாக்கள் பகுதியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டிருக்கு. ‘அய்யா வைகுண்டர் குறித்த தகவல்களில் எதுவெல்லாம் சரி’ என ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அதற்கான பதிலாகச் சில பதில்களைத் தந்திருக்கிறார்கள். ஆனால் இதே கேள்வியில் மொழி பெயர்க்கிறோம் என்கிற பெயரில் ‘முடிசூடும் பெருமாள்’ங்கிற வார்த்தையை ‘காட் ஆஃப் ஹேர் கட்டிங்’னு ஆங்கிலத்துல குறிப்பிட்டிருக்காங்க. இது ஏதோ தெரியாம நடந்ததா நினைக்கத் தோனலை. யாரோ வேணும்னே பண்ணியிருப்பாங்களோனு கூட நினைக்க தோணுது. பல கோடிப் பேர் வணங்குகிற கடவுள் விஷயத்துல எப்படி இவ்வளவு கவனக் குறைவா இருப்பாங்க. அய்யா வைகுண்ட சுவாமிகள் மீது மரியாதை இல்லாத வகையில் நடந்த இந்தப் பிழைக்கு, டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். மேலும், அந்த வினாவால் போட்டித் தேர்வில் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதால், அந்தக் கேள்விக்கான மதிப்பெண் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்டர், தென் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற சமத்துவ சிந்தனையை பரப்பியவர். அவரை “முடிசூடும் பெருமாள்” என்று பின்பற்றுபவர்கள் மரியாதையுடன் அழைத்து வந்துள்ளனர். ஆனால் அதை “முடிவெட்டும் கடவுள்” என்று மொழிபெயர்த்தது, அவரின் பெருமையை மட்டுமல்லாமல், அவரது வழியை பின்பற்றும் பல ஆயிரக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தியுள்ளது. அதனாலதான் தமிழக முதல்வர் இந்த விஷயத்துல உடனடியா தலையிட்டு தவறுக்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கணும்னு கேக்கறோம்” என்று தமிழக முதல்வருக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ் பி மாரியப்பன் கோரிக்கை வைத்துள்ளார்.