பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தவே கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்,இந்த வழக்கின் புலன் விசாரணையை விரைந்து முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும், என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் உள்ளிட்ட அடையாளங்கள் இடம்பெற்றுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளத்தை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை கவனமாக கையாள வேண்டும். இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டோரின் அடையாளங்களை எந்த வடிவிலும் வெளிப்படுத்தக் கூடாது என காவல்துறையினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்க தமிழ்நாடு டிஜிபி, சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிடுகிறோம்.
இதை மீறினால் அவர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் உள்ள பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை நீக்கும்படி, கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிடுகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார். இந்த வழக்கில் ஏற்கனவே சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை முடித்து வைத்து, நீதிபதி உத்தரவிட்டார்.