இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டி கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி தொடரில் ஆடுகிறது. ஐசிசி 2025-27ம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்குட்பட்ட இதன் முதல் டெஸ்ட் லீட்ஸ் ஹெடிங்லி கிரிக்கெட் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்திய அணியில் ரோகித்சர்மா, விராட் கோஹ்லி டெஸ்ட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பன்ட் துணை கேப்டனாக செயல்பட உள்ளார்.
ஜெய்ஸ்வாலுடன் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களம் இறங்குவார். தமிழக வீரர் சாய் சுதர்சன் 3வது இடத்திலும், கில் 4வது இடத்திலும் ஆடுவர். 5வது இடத்தில் ரிஷப் பன்ட், 6வது இடத்தில் கருண் நாயருக்கு வாய்ப்பு கிடைக்கும். சுழற்பந்து வீச்சாளர் இடத்தில் ஜடேஜா ஆடுகிறார். பவுலிங்கில் பும்ரா, சிராஜ், ஷர்துல் தாகூர், அர்ஷ்தீப் சிங் அல்லது பிரசித் கிருஷ்ணா இடம்பெறுவர். அனுபவ வீரர்கள் இல்லாத நிலையில் கில் தலைமையிலான இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இங்கிலாந்தில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் புதிய கேப்டன் கில்லுக்கு முதல் தொடரே பெரும் சவாலாக அமைந்துள்ளது. பேட்டிங்கில் ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், ஆகியோருடன் புதுமுக வீரர் சாய்சுதர்சன், பல ஆண்டுக்கு பின் களம் இறங்கும் கருண் நாயர்ஆகியோர் மீது எதிர்பார்ப்பு உள்ளது. பவுலிங்கில் நம்பர் 1 வீரராக உள்ள பும்ரா இங்கிலாந்து வீரர்களின் தூக்கத்தை கெடுப்பார்.
மறுபுறம் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். முதல் டெஸ்டிற்கான பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பேட்டிங்கில் பென் டக்கெட், சாக் கிராலி, ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் என வலுவான வரிசை உள்ளது. பவுலிங்கில் ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங் வேகத்தில் இந்தியாவுக்கு நெருக்கடி அளிப்பர். சுழலில் சோயிப் பஷீர் இடம் பெற்றுள்ளார்.
பேட்டிங்கில் ஜோ ரூட் இந்தியாவுக்கு எதிராக மட்டும் 10 சதம் அடித்துள்ளார். அவரை கட்டுப்படுத்துவது தான் இந்திய பவுலர்களும் பெரும் சவாலாக இருக்கும். இரு அணிகளும் வெற்றியுடன் தொடரை தொடங்கும் முனைப்பில் உள்ளன. கடந்த முறை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் டிரா (2-2)ஆன நிலையில் இந்த முறை தொடரை வெல்ல இங்கிலாந்து போராடும். இந்திய நேரப்படி தினமும் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும் இந்த போட்டியை சோனி டென் சேனல் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
இதுவரை நேருக்கு நேர்….
- இந்தியா-இங்கிலாந்து அணிகள் இதுவரை 136 டெஸ்ட்டில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் 51ல் இங்கிலாந்து, 35ல் இந்தியா வென்றுள்ளன. 50 போட்டி டிராவில் முடிந்துள்ளது. கடைசியாக மோதிய 5 டெஸ்ட்டில் (இந்தியாவில் நடந்தது) இந்தியா 4, இங்கி. 1ல் வென்றுள்ளன.
- இங்கிலாந்து மண்ணில் கடைசியாக மோதிய 5 டெஸ்ட்டில் தலா 2ல் வென்றுள்ளன. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது.
- இங்கிலாந்து மண்ணில் இந்தியா 63 டெஸ்ட்டில் ஆடி 7ல் மட்டுமே வென்றுள்ளது. 35ல் தோல்வி அடைந்துள்ளது. 21 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது.
லீட்ஸ் மைதானத்தில் இதுவரை….
லீட்ஸ் மைதானத்தில் இந்தியா இதுவரை 7 டெஸ்ட்டில் ஆடி 2ல் வென்றுள்ளது. 4ல் தோல்வி அடைந்துள்ளது. 1டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. இங்கிலாந்து இங்கு 80 டெஸ்ட்டில் ஆடி 37ல் வெற்றி, 25ல் தோல்வி கண்டுள்ளது.18 டெஸ்ட் டிராவில் முடிந்திருக்கிறது. ஆஸ்திரேலியா இங்கு 1993ல் 653/4d ரன் எடுத்தது தான் அதிகபட்ச ஸ்கோர். இந்தியா இங்கு 2002ம் ஆண்டில் 628/8d ரன் எடுத்தது தான் 2வது சிறந்த ஸ்கோராகும்.
லீட்ஸில் முதல் நாளில் பந்துகள் கொஞ்சம் பவுன்ஸ், ஸ்விங் ஆகும். ஆனாலும் பந்திற்கு நேரான டிரைவ்களை ஆட முடியும் .முதல் நாளுக்குப் பிறகு விரைவில் பிட்ச் ஃபிளாட் ஆக மாறும் என்பதால் முதல் நாள் பவுலிங் சாதக அம்சங்களைப் பயன்படுத்த டாஸ் வெல்லும் அணி முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்யும். கடைசியாக இங்கு நடந்த 22 டெஸ்ட்டில் 16ல் டாஸ் வென்ற அணி பவுலிங்கை தான் தேர்வு செய்துள்ளது. லீட்ஸ்சில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இல்லை. அதிகபட்ச வெப்பநிலை 84 டிகிரியாக இருக்கும்.
3வது இடத்தில் ஆடுவது யார்?
3வது இடத்தில் யார் விளையாடப் போகிறார்கள் என்பது குறித்து இன்னும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன், ஆனால் நிச்சயமாக 4, 5 பேட்டிங் வரிசை உறுதியாகிவிட்டது. கில் 4வது இடத்தில் பேட்டிங் செய்வார் என்று நினைக்கிறேன், நான் 5வது இடத்தில்தான் இருப்பேன். மீதமுள்ளவற்றைப் பற்றி நாங்கள் தொடர்ந்து விவாதிப்போம்,” என நேற்று பேட்டியின் போது ரிஷப் பன்ட் கூறினார்.