நெல்லை: நெல்லை – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் நாங்குநேரி டோல்கேட்டையடுத்த பாணாங்குளம் அருகே 2 சொகுசு கார்கள் வேகமாக சென்று கொண்டிருந்தன. இதில் ஆடி கார் ஒன்றின் இருக்கையில் அமராமல் 2 வாலிபர்கள் டாப்பில் அமர்ந்து செல்போனை பார்த்துக் கொண்டும், கைகளை உயர்த்திக் கொண்டும் சென்றனர். இன்னொரு காரில் சென்ற நபர், காரின் பக்கவாட்டுக் கதவைத் திறந்து தொங்கியபடி அவரது சகாக்களுக்கு சைகை காண்பித்தார். வாகனங்கள் அதிவேகமாக செல்லும் நான்கு வழிச்சாலையில் வாலிபர்கள் சிலரின் பொறுப்பற்ற செயலை பார்த்து பிற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து மெதுவாக சென்றனர். சிலர் பயத்தில் வாகனத்தை ஓரங்கட்டினர். இதை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். அது இப்போது வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து நாங்குநேரி போலீசார், அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து சம்பந்தபட்ட வாலிபர்களை தேடி வருகின்றனர். இந்த சாலையில் கடந்த 2 மாதங்களில் நடந்த கோர விபத்துக்களில் 10 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.