==============
முன்னாள் அதிமுக அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி சண்முகநாதனின் மகனும் தூத்துக்குடி மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ராஜா சென்னையில் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி 59 வது வார்டு அதிமுக கவுன்சிலரும், எனது சொந்த தம்பியுமான ராஜா, தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் பங்கு தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சென்னையைச் சேர்ந்த பொன்னரசி( முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகள்) என்பவர். சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் கொடுத்திருந்தார்.
அந்தப் புகாரில், ராஜா, தங்களது Omeena Pharma Distributors Pvt. Ltd., நிறுவனத்தில் முதலீடு செய்தால் 16 % பங்குகள் தருவதாக கூறினார். இதற்காக, ஸ்ரீபெரும்பத்தூர் நந்தம் பாக்கத்தில் உள்ள எனது கணவருக்கு சொந்தமான 2 ஏக்கர் சொத்தின் பத்திரங்களை வங்கியில் அடமானம் வைத்து, ரூ. 11 கோடி பெற்றார். பின்னர் அந்தப் பணத்தை தனக்கு தெரியாமல், ராஜாவின் மற்றொரு நிறுவனமான Ashun Exim என்ற நிறுவனத்திற்கு மாற்றிக்கொண்டார்.
மேலும், ராஜா தூத்துக்குடி மாவட்டத்தில் Golden Blue Metals Pvt. Ltd., என்ற பெயரில், கல்குவாரி தொழில் துவங்க இருப்பதாக கூறினார். அதில் முதலீடு செய்தால் அதிக பங்குகள் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னிடம் இருந்து முதலீடாக 300 சவரன் நகைகளை பெற்று, அதனை ராஜா தனது பெயரில் அடமானம் வைத்து பணம் பெற்றுள்ளார்.
அந்த பணத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 40 ஏக்கர் இடத்தினை அவரது பெயரில் வாங்கிக்கொண்டார். மேலும், தனக்கு லாபத்தில் பங்கு கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ராஜாவும், அவரது மனைவியும் சேர்ந்து என் கையெழுத்தைப் போலியாகப் போட்டு அவர்களின் Golden Blue Metals Pvt Ltd., நிறுவனத்தின் பங்குகளை சட்டவிரோதமாக ராஜா பெயருக்கு மாற்றிக்கொண்டனர்.
இது மட்டுமின்றி தான் கொடுத்தது போல ராஜினாமா கடிதம் தயார்செய்து அதனை ROC-க்கு ஆன்லைன் மூலம் பதிவேற்றம்செய்து தன்னை நிறுவனத்தின் இயக்குநர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு அதற்கு பதிலாக தனது மனைவி அனுஷாவை இயக்குநராக நியமித்துள்ளார். தன்னை ரூ.17 கோடி ஏமாற்றிய ராஜா மற்றும் அவரது மனைவி அனுஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார்.
இந்தப் புகாரை ஏற்ற சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பொன்னரசி கொடுத்த புகாரில் உண்மை இருப்பதை உறுதி செய்தனர். தொடர்ந்து ராஜா, எந்த நேரத்தில் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல நேரிடும் என அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் வழங்கப்பட்டது.
போலீஸார் சந்தேகித்தபடி, சென்னையில் இருந்து மலேசியாவுக்குச் செல்ல ராஜா, சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அங்கு மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் காயத்திரி தலைமையிலான மத்திய குற்றப்பிரிவு EDF-IIIன் காவல் ஆய்வாளர் கமல் மோகன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழு ராஜாவை கைது செய்தது. கைது செய்யப்பட்ட ராஜா, எழும்பூர் மத்திய குற்றப்பிரிவு மற்றும் குற்ற புலனாய்வு பிரிவு நீதிமன்ற நடுவர் முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகள் தனது சொந்த தம்பி மீது பண மோசடி புகார் கொடுத்த இசையும் அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.