தூத்துக்குடி முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் ஜோஸ்வா தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் சித்தார்த்தன். துணைத் தலைவர் ஸ்டீபன், அறங்காவலர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தாா்கள்.
விஐடி நிறுவனங்களின் நிறுவனர் விஸ்வநாதன் பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசுகையில் கல்வி மனிதகுலத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கொடை கல்வியே மனிதனையும் குடும்பத்தையும் பொருளாதாரத்தையும், சமூகத்தையும் உயர்த்துகிறது” எனக் குறிப்பிட்டதுடன், 2020-2024 மற்றும் 2021-2025 கல்வியாண்டு மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்கிய கிரேஸ் பொறியியல் கல்லூரி நிர்வாகத்தின் கல்வித் தொண்டைப் பாராட்டினார். இந்தியாவின் மொத்த உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும், உலகளவில் பட்டதாரிகளுக்குள்ள வேலைவாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்புகளையும் எடுத்துரைத்து 13 சதவீத வேலைவாய்ப்பு நிலையைச் சுட்டிக்காட்டினார். மாணவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில், விஐடி வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகும் முன்னணி நிறுவனங்களை கிரேஸ் பொறியியல் கல்லூரிக்கும் பரிந்துரைப்பதுடன், கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துவதற்கும் இசைவு தெரிவித்தார். தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய மையமாகத் தூத்துக்குடி மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உருவாகி வரும் வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டி பட்டம் பெறும் மாணவர்கள் தங்களது திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டால், இவ்வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி தங்களது எதிர்காலத்தை வளமாக அமைத்துக் கொள்ள முடியும் என அறிவுறுத்தினார். மேலும், கிரேஸ் பொறியியல் கல்லூரியில் இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளை நிறைவு செய்து வெளியேறும் சிறந்த மாணவ, மாணவியரில் தலா ஒருவருக்கு விஐடி நிறுவனத்தின் சார்பில் இனிவரும் கல்வியாண்டுகளில் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என அறிவித்தார். 2021-25 கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள் தங்களது பட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, பட்டம் பெற்றனர்.
விழாவில் சென்னை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரியின் வெளிவிவகாரத் துறை டீன் டாக்டர் மணிவண்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக அலுவலர் தினகரன், துணை முதல்வர் மோகன் கிட் இயந்திரவியல் துறை பேராசிரியர் கனகசபாதி ஆகியோா் செய்திருந்தனா்.. செயற்கை நுண்ணறிவு துறைத் தலைவர் நான்சி சித்ரா திலகா நன்றியுரையாற்றினார்.
முள்ளக்காடு கிரேஸ் பொறியியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா