தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது தூத்துக்குடியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் நிர்மல்குமார் அரசியல் நாகரீகமின்றி முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பற்றியும், என் தந்தையார் என்.பெரியசாமி பற்றியும் என்னைப் பற்றியும், முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை பற்றியும் அவதூறாக பொய்ச்செய்திகளை பேசியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
கடந்த காலங்களில் மழை வெள்ளநேரத்தில் தூத்துக்குடியில் யாருமே களத்துக்கு வரவில்லை என வாய்க்கூசாமல் பொய் பேசியிருக்கிறார். எம்எல்ஏ என்கிற முறையிலும் அமைச்சர் என்ற முறையிலும் தூத்துக்குடியின் அனைத்து வீதிகளுக்கும் சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டோம். அன்றைய துணை முதல்வர்உதயநிதிஸ்டாலின் தொகுதியின் கனிமொழி எம்பி உள்ளிட்டவர்கள் ஆய்வு செய்து தீர்வை ஏற்படுத்தினர். இது தூத்துக்குடி தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். ஆனால் அந்த நேரத்தில் நீங்கள் எல்லாம் எங்கே இருந்தீர்கள் என்று யாருக்குமே தெரியாது. கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை திரும்பி பார்க்காமல் ஓடிய நீங்கள் இதை பேசலாமா? தூத்துக்குடியில் பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் திமுகவினர் வசூல் செய்வதாக பொய்யாக நிர்மல்குமார் பேசியுள்ளார். அப்படி யாரிடமும் திமுகவினர் வசூல் செய்யவில்லை. தாங்கள் அதை நிரூபிக்கமுடியுமா? இல்லையென்றால் பகிரங்கமாக திமுகவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். வாய் இருக்கிறது. அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற அகம்பாவத்தை கைவிடுங்கள். பல கட்சிகள் மாறிய பச்சோந்தி நிர்மல்குமார் இனியாவது கண்ணியமாக பேச வேண்டும் என்று வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கூறியுள்ளார்